கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் பகிர்ந்து கொண்ட சுவாரசிய தகவல்
தஞ்சை மாவட்டத்தில் ஐந்திணை நிலங்களும் திருத்தலங்களாக விளங்குகின்றன என கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் அருள்தரும் கர்ப்பரட்சாம்பிகை (கருக்காத்த நாயகி) உடனாகிய அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
இன்று 21.05.2024 செவ்வாய்க்கிழமை காலை, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து ஆலய பிரகாரங்களில் வலம் வந்து, திருக்கோயில் நிர்வாகம் நல்ல முறையில் அமைத்து பராமரித்து வரும் திருநந்தவனத்தை பார்வையிட்டு அவர்கள் தெரிவித்ததாவது,
அருமையான இந்த நந்தவனத்தில், தலவிருட்சமான முல்லைக்கொடி, நாகலிங்க மரம், செண்பகமரம் உள்ளிட்ட பல்வேறு வாசனை மலர்களைத் தரும் மரங்களும் தெய்வீக செடி கொடிகளும் வளர்க்கப்படுவது பாராட்டுக்குரியது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதை இயற்கையோடும் இறைவனோடும் தொடர்புபடுத்தும் இனிமையான சூழல். அதோடு ஆங்காங்கே தேவாரத் திருமுறைகளை பதிப்பித்துள்ளதும் திருக்கோயில் தல புராண வரலாறு ஓவியங்களாக தீட்டியுள்ளதும் நல்ல முயற்சி.
இத்திருக்கோயில் தேவார பாடல் பெற்ற தலமும் பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றும் (முல்லைவனம்) ஆகும். மேலும் கூடுதலான ஒரு தகவல் என்னவென்றால்? தமிழர்கள் நிலங்களை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தாக வகுத்தார்கள் அவை ஐந்திணை நிலங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐந்து திருக்கோயில்கள் தல விருட்சங்கள் மற்றும் தலத்தின் பெயர்கள் அடிப்படையில் திருத்தலங்களாக விளங்கி, ஐந்திணை நிலங்களின் பெயர்களுடன் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1. சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை ( குறிஞ்சி ) 2. முல்லைவன நாதர் திருக்கோயில், திருக்கருகாவூர் ( முல்லை ) 3. மகாலிங்க சுவாமி திருக்கோயில்,
திருவிடைமருதூர் (மருதம்) 4. சுவாமி திருக்கோயில், தியாக சமுத்திரம் ( நெய்தல் ) 5. பாலைவன நாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை ( பாலை) இதில் கடல், கடல் சார்ந்த பகுதிக்கு நெய்தல் என்று பெயர் தியாக சமுத்திரம் என்பதை கடலாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது நல்லூரில் "சப்த சாகர தீர்த்தம்" என்னும் திருக்குளம் இருக்கிறது இதனையும் கடலாகக் கொள்ளலாம். இவை சிந்திக்க தக்கவை. இறைவன் நிகழ்த்தியிருக்கும் அற்புதத்தை பாருங்கள். ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்... என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் வேண்டுகிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று தரிசிப்பவர்க்கு ஒவ்வொரு தகவலுமே சிவானுபவம் சிவானந்தத்தை தருவதாகும். நம் பக்குவத்திற்கு ஏற்ற பார்வையையும் விளக்கத்தையும் ஞானத்தையும் திருவருள் நல்குகிறது என்றார்கள்.