பூந்தமல்லி தி.மு.க.,வில் உட்கட்சி மோதல்
திருவள்ளூர் தனி லோக்சபா தொகுதியில் பூந்தமல்லி தி.மு.க.,வில் உட்கட்சி மோதல்.
Update: 2024-04-05 09:21 GMT
திருவள்ளூர் தனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர் பூந்தமல்லி கிழக்கு ஒன்றியத்தில் நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்ய தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் காலை 8:00 மணிக்கு பிரச்சாரம் துவங்கியது. சென்னீர்குப்பம், பாரிவாக்கம், வரதராஜபுரம் வழியாக எட்டு ஊராட்சிகளை கடந்து நசரத்பேட்டை, அகரமேல், மேப்பூர் சென்று இறுதியாக செம்பரம்பாக்கத்தில் பிரசாரம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நசரத்பேட்டையில் வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்க 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி தட்டு மாலைகளுடன், பேண்ட் வாத்தியங்கள் முழங்க காத்திருந்தனர். பூந்தமல்லி ஒன்றியத்தில் தி.மு.க.,வினரிடையே கோஷ்டி பூசல் உள்ளது. பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவரும், முன்னாள் பூந்தமல்லி ஒன்றிய தி.முக., செயலருமான ஜெயகுமாரை கட்சியில் இருந்து ஓரம் கட்ட, பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகிகளில் இன்னொரு தரப்பினர் காய் நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் நசரத்பேட்டையில் ஜெயகுமார் வரவேற்பு அளிப்பதை தடுக்க திட்டமிட்டு, பிரசார வாகனம் செல்வதை எதிர்தரப்பினர் தாமதப்படுத்தினர். வரதராஜபுரத்தில் பிரசாரம் முடிந்து, அருகில் உள்ள நசரத்பேட்டைக்கு செல்ல வேண்டிய வாகனத்தை செம்பரம்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்றனர். வெயிலில் நசரத்பேட்டையில் உள்ள கூட்டம் கலைந்து சென்ற பிறகு, அங்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், காலை 10:00 மணிக்கு திரண்ட கூட்டத்தை பகல் 1:00 மணி வரை கலைந்து செல்லாமல், ஜெயகுமார் தரப்பினர் கட்டுப்பாட்டில் வைத்தனர். இதை அறிந்து, பிரசார வாகனத்தை, நசரத்பேட்டையில் நிற்காமல் செல்ல எதிர்தரப்பினர் முடிவு செய்தனர். ஆனால், பகல் 1:30 மணிக்கு வாகனம் நசரத்பேட்டையை கடந்த போது, ஜெயகுமாரின் ஆதரவாளர்கள் வாகனத்தை வழிமறித்தனர். திடீர் ஏற்பாடாக அந்த இடத்திலேயே மலர் துாவி, ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தி.மு.க.,வினர் இந்த கோஷ்டி பிரச்னையால் நசரத்பேட்டை சாலையில் நேற்று மூன்று மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.