தேவாங்கர் கலை கல்லூரியில் உலக மகளிர் தின கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம், தேவாங்கர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 2024 ஆம் ஆண்டின் உலக மகளிர் தின சின்னம்(லோகா) வடிவில் அமர்ந்து மகளிர் தின உறுதிமொழி ஏற்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளின் கலை மற்றும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகள் கல்லூரி மைதானத்தில் 2024 ஆம் ஆண்டின் உலக மகளிர் தின சின்னம்(லோகா) வடிவில் வரிசையாக அமர்ந்து மகளிர் தினத்தை கொண்டாடினார். மேலும் அந்த சின்ன வடிவத்திலேயே அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதோடு, நிகழ்காலத்தில் சமத்துவம் என்ற தலைப்பில் மகளிர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வேதியியல் துறை தலைவர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இணை பேராசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற பாவை மன்ற நிகழ்ச்சியில் நிகழ்காலத்தில் சமத்துவம் என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் உமாராணி சிறப்புரையாற்றி தற்போதைய சூழலில் பெண்களின் வாழ்க்கை முறை குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கிய பங்கு குறித்தும், பெண்களின் ஆற்றல் மற்றும் திறன் குறித்தும் விளக்கினார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ் துறை பேராசிரியை வீரலட்சுமி நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.