நில அளவீட்டுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகம்
நில அளவீட்டுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார்.
Update: 2024-02-07 10:03 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.