பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை போதுமானதாக இல்லை - நீதிமன்றம் அதிருப்தி
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை போதுமானதாக இல்லை - நீதிமன்றம் அதிருப்தி
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் பல ஆயிரம் கோடி நிதி மோசடி விவகாரத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள்?அவற்றின் மதிப்பு எவ்வளவு? இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்கள் என்ன? உள்ளிட்ட வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த கௌதமி என்பவர் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தியில்லை எனக்கூறி, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல்வேறு பெயர்களில் 20-க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பல மடங்கு வட்டி தருவதாக கூறி செயல்பட்டது.
ஆனால், முதலீடு செய்த மக்களுக்கு பணம் திரும்பக் கொடுக்காமல், பல ஆயிரம் கோடி ரூபாய்களை மோசடி செய்தது. இது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில், நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்டுகள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகள் பலர் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதிக வட்டி லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறி, என்னை இதில் ரூ.1 கோடி முதலீடு செய்ய வைத்தனர். முதலீடு செய்த நிலையில், கூறியபடி வட்டி லாபம், நிலமோ வழங்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. தற்போது, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மோசடியில் ஈடுபட்டவர்களோடு, வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர், உறுதுணையாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில், காலதாமதம் செய்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு இன்று (டிச.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகிகள் வீரசக்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இதுவரை, ரூ.25 கோடிக்கு மேல் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, நிதி நிறுவன நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பரிவு காவல்துறை விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்னும் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? முக்கிய நபர்கள் யார்? நியோமேக்ஸ் நிதி நிறுவன கிளை நிறுவனங்களின் முழு விவரங்கள், அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பு எவ்வளவு? இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்களின் விவரங்கள்? மேலும் தற்போதுவரை புகார் அளித்தவர்களின் விவரங்களை விரிவான அறிக்கை உள்ளிட்டவைகளை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும்டிச.18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.