தஞ்சை மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் முறைகேடு?:லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

தஞ்சை மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-17 16:23 GMT

தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சி கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போதைய ஆணையராக இருந்த சரவணக்குமார் பணியாளர்களின் ஊதிய பிரச்சினையை தீர்க்கவும், மாநகராட்சியின் வருமானத்தை பெருக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது முதலில் மீட்கப்பட்டது.

அந்த கடைகளில் ஏலம் ரத்து செய்யப்பட்டு பொது ஏலத்திற்கு விடப்பட்டது. இதனால் மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருந்து மீண்டது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், காமராஜர் மார்க்கெட் கடைகள்,

சரபோஜி மார்க்கெட், திருவள்ளுவர், காந்திஜி வணிக வளாகங்களின் கடைகள் ஆகியவற்றை ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் எடுத்த வியாபாரிகள் மாத வாடகை அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தாலும் வேறு வழி இன்றி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தனர்.

பின்னர் கடைகளை நடத்த முடியவில்லை என்று கூறி மாநகராட்சி இடம் ஒப்படைத்தனர். இதன் பிறகு வாடகை குறைக்கப்பட்டு மீண்டும் ஏலம் விடப்பட்டது. இதற்கான தீர்மானத்தை திமுக மேயர் கொண்டு வந்த போது திமுக உறுப்பினர்களிலேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் பணியிட மாறுதலில் சென்றபோது மாநகராட்சியில் ரூ 30 கோடி கையிருப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழக அரசுக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனரக அலுவலர்கள் குழுவினர் மாநகராட்சியில் உள்ள ஆவணங்களை தணிக்கை செய்தனர்.

இதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரை செய்தனர். இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ள னர்.

Tags:    

Similar News