ஐடிஐ பயிற்றுனர் வீட்டில் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

திருச்செந்தூரில் ஐடிஐ பயிற்றுனர் வீட்டில் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-30 05:12 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கமலா கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்(33). ஐடிஐயில் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா. இவர்களுக்கு கயில் முத்ரா(2) பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலையில் திருநெல்வேலியில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு சென்று விட்டு நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து, வீட்டின் முகப்பு கதவு உடைத்து, டிராயரிலிருந்த பீரோ சாவி எடுத்து திறந்து அதிலிருந்த 38 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவைத் திறந்து சுவர் ஏறி குதித்து தித்து தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன் திருச்செந்தூர் கோயில் போலீசில் புகார் செய்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் அந்த பகுதியில் பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ. 16 லட்சம் ஆகும்.

திருச்செந்தூர் பகுதியில் அண்மை காலத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அண்மையில் திருச்செந்தூர் சிவந்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வீட்டில் நைட்டி மற்றும் முகமூடி அணிந்து உள்ளே சென்று 21 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நகர பகுதியான கமலா கார்டனில் உள்ள வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து சம்பவங்களால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் போலீசாருக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு சம்பவங்களில் மர்ம ஆசாமிகளை கண்டறிய வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீஸ் டிஎஸ்பி வசந்தராஜ் கூறினார்.

Tags:    

Similar News