சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்ப டைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, உடனடியாக வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு முன் வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஜனவரி 30 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது , தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்து, பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு சாலை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண . மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.