பரம்பூரில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
பரம்பூரில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டெடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றை தொல்லியல் ஆர்வலர்கள் பேராசிரியர் சுப. முத்தழகன், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர். இதுவரை இந்தச் சிலை யாரும் பதிவு செய்யவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் நாராயணமூர்த்தி கூறியது: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் பரம்பூர் கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே சமணர் சிற்பம் ஒன்று இருப்பதாக தமிழ்வேல் மதியழகன் என்பவர் அளித்த தகவலை அடுத்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். பரம்பூர் கங்காணி குளத்தின் கரையையொட்டி விளைநிலத்தில் 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று உள்ளூர் மக்களால் வழிபாட்டில் உள்ளது. தீர்த்தங்கரர் தலைக்குமேல் கிளைகளை பரப்பிய நிலையில் அசோக மரமும், இருபுறமும் சாமரம் வீசும் இயக்கர்கள் உருவங்களும் காணப்படுகின்றன. சிற்பத்தின் மேற்பகுதி உடைந்துள்ளதால் இருபுறமும் தூண் அமைத்து ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் கலையமைதியைக் கணக்கில் கொண்டு, இது கிபி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமண சின்னங்கள் அதிகமாகக் காணப்படும் சித்தன்னவாசல், அன்னவாசல், குடுமியான்மலை ஆகியவற்றின் அருகே இந்த புதிய சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.பரம்பூரில் இந்தச் சிற்பத்தை சமணர் சிலை என்றே அழைக்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை தை மாதத்தில் பொங்கல் படையல் இவருக்கு வைக்கப்படுகிறது என்றார் நாராயணமூர்த்தி.