வேலூரில் 19ம் தேதி ஜமாபந்தி தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி ஜமாபந்தி தொடங்கவுள்ள நிலையில், பட்டா மாற்றம், நிதி உதவி கோருதல் போன்ற பல கோரிக்கைகளை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-06-17 09:37 GMT

வேலூர் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி ஜமாபந்தி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 19-ந்தேதி தொடங்குகிறது. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ஜமாபந்தி நடைபெற உள்ளது. பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்திக்கு கலெக்டர் சுப்புலெட்சுமியும், வேலூர் தாலுகாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியும்,அணைக்கட்டு தாலுகாவிற்கு கலால் உதவி கமிஷனர் முருகனும், காட்பாடி தாலுகாவிற்கு வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதாவும், கே.வி.குப்பம் தாலுகாவிற்கு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியும், குடியாத்தம் தாலுகாவிற்கு வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுமதி ஆகியோர் தீர்வாய அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜமாபந்தியில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின் கீழ் நிதி உதவி கோருதல் மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் வருவாய் தீர்வாய அலுவலரால் பெறப் படும். பொதுமக்கள் தங்கள் கிராம கணக்குகளின் தணிக்கை நாளில் தான் மனுக்கள் கொடுக்க வேண்டும்.தணிக்கை நாட்களுக்கு முன்னதாக கொடுக்கப்படும் மனுக்களும் அதற்குரிய கிராம தணிக்கை நாட்களில் தான் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News