என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் கன்னங்குறிச்சியில் அரசு பொறியாளர் வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
Update: 2024-03-18 06:30 GMT
வழக்குப்பதிவு
சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டதால் 2 மகள்களும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காவலாளி ராஜ் வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம், நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.