வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் கொள்ளை

சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-05-08 02:31 GMT

பைல் படம் 

சேலம் பொன்னம்மாபேட்டை நம்பர்-1 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 59). சரோஜா கடந்த 2-ந் தேதி சங்கர்நகரில் உள்ள மகள் பிரியா வீட்டுக்கு சென்றார். அவர் நேற்று மதியம் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போது அங்கு பீரோ, அலமாரி ஆகியவற்றின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இருந்த 60 பவுன் நகை, ரூ.65 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதவிர வீட்டில் இருந்த 10 கிலோ வெள்ளி பொருட்களையும் அவர்கள் அள்ளி சென்றனர்.

Advertisement

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் ஜூலியும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்ப பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டின் முன்புறம் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் தரையை நோக்கி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News