கூட்டுக்குடிநீர் திட்டம் ஆய்வு
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு அமைக்கபட்டுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளை பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பராமரிப்பிலுள்ள 306 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தைச்சார்ந்த 15 கடைகோடி கிராமங்களான அயன்பேரையூர், தேவையூர். எறையூர், வி.களத்தூர், திருவாளந்துரை மற்றும் அகரம் ஊராட்சிகளுக்கு வெள்ளாற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்றப்பட்டு, ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்பொழுது முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமென்று உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சக்திவேல், கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் , வீரமலை, வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.