நீதித்துறை ஊழியர் தற்கொலை முயற்சி - நடவடிக்கை எடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-04-30 06:05 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் நடராஜன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நீதிமன்றத்திற்கு இவர் பணி இடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். நடராஜனுக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக மருத்துவ விடுப்பும் கோரி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்ற நிர்வாகம் அவருக்கு விடுப்பும் வழங்கவில்லை. அதேசமயம் அவருக்கு இரண்டு மாதங்களாக ஊதியமும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் நீதிமன்ற பணிக்கு செல்வதற்கு கூட இயலவில்லை எனக்கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற ஊழியருக்கு, நீதிமன்ற நிர்வாகம் கொடுத்த நெருக்கடியால் தான் தற்கொலைக்கு முயன்று உள்ளார் எனக் கூறி, தமிழக முழுவதும் நேற்று இரவு மாவட்ட தலைநகரங்களில் உள்ள நீதிமன்ற அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பொன். ஜெயராம் உள்ளிட்ட நீதித்துறை ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News