கைலாஷ் மானசரோவர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
கைலாஷ் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.;
ஆண்டு விழா
சேலம் கைலாஷ் மானசரோவர் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இசை, நடனம், நாடகம் ஆகிய 3 கருத்தாக்கங்களை கொண்டு டிராமுடா என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டு விழாவை, ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ் கல்விக்குழுமங்களின் தலைவர் கே.கைலாசம் தொடங்கி வைத்தார். கைலாஷ் மானசரோவர் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
மேலும் சர்வதேச அபாகஸ் போட்டி மற்றும் கேலோ இந்தியா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கியும் அவர் கவுரவப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில், பிரி கேஜி தொடங்கி 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியம், நாட்டின் பன்முகத்தன்மை, இயற்கையை நேசிப்பது என்பன உள்பட பல்வேறு பொருட்களில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக பிரி கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளின் மழலை திறமை பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக லேசர் ஷோ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. லேசர் ஷோவை பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் ரசித்து மகிழ்ந்தனர்.
ஆண்டு விழாவின் நிறைவாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் மேடைக்கு வரவழைக்கப்பட்டு தங்களது குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினர். இதன்மூலம் தங்களை மீண்டும் பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்று விட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.