உத்திரமேரூர் ஏரி : ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
உத்திரமேரூரில் உள்ள ஏரியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வரும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 13:59 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. 20 அடி ஆழம் கொண்டது இந்த ஏரி. மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால் காட்டுப்பாக்கம், குப்பையநல்லுார், நீரடி, மேனலுார், அரசாணிமங்கலம், வேடபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5,600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இந்நிலையில், சில தினங்களாக பெய்த மழையால், நீர் நிலைகளில் வழிந்தோடும் தண்ணீர் மற்றும் அனுமந்தண்டலம் செய்யாற்று வெள்ளப்பெருக்கால் உத்திரமேரூர் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 20 அடி ஆழம் கொண்ட உத்திரமேரூர் ஏரி, 18.5 அடி ஆழம் நிரம்பி உபரி நீர் வெளியேறும் கலங்கல் பகுதியில் தண்ணீர் வெளியேறி வருகிறது. நிரம்பி வழியும் ஏரி கலங்கல் மற்றும் ஏரியில், அப்பகுதி வாசிகள், சிறுவர் - சிறுமியர் உள்ளிட்டோர் குளிக்கின்றனர். ஏரியில் ஏற்கனவே மண் எடுத்த பள்ளங்களில், ஆழம் அதிகமாக உள்ளது. இது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சிறுவர்கள் குளிக்க செல்லும் போது சேற்றில் சிக்கும் ஆபத்து உள்ளது. நீர்வளத்துறை சார்பில், இதுகுறித்து எச்சரிக்கை பலகை அப்பகுதியில் வைக்கப்பட்டும், ஆபத்தை உணராமல், சிறுவர் - சிறுமியர் உள்ளிட்டோர் ஆனந்த குளியலிடும் சம்பவம் தொடர்கிறது.