திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்ற குபேர கிரிவலம்

Update: 2023-12-13 00:42 GMT

 குபேர லிங்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ஆன்மீக ஸ்தலம் திருவண்ணாமலை. ஆன்மீக நகரமான திருவண்ணாமலை என்றாலே நினைவிற்கு வருவது அண்ணாமலையார் திருக்கோவில். 14 கி.மீட்டர் தொலைவுள்ள கிரிவலம் மற்றும் 2668 அடி உயரமுள்ள மலையும் தான். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மாதந்தோறும் வரும் பவுர்ணமி, ஆண்டுக்கு ஒரு முறை வரும் சித்ரா பவுர்ணமி, உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா, தை மாதம் நடக்கும் திருவூடல் மற்றும் மறுவூடல் ஆகிய திருவிழா காலங்களில் பல்வேறு மாவட்ட, மாநில,வெளிநாடுகளிலிருந்து பல லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வர்.

Advertisement

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஜோதிடர் ஒருவரால் குபேர கிரிவலம் என்ற ஒன்று பிரபலமடைந்தது. குறிப்பாக ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதத்தில் வருகின்ற தேய்பிறை சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் 7வது லிங்கமான குபேர லிங்கத்திற்கு பூஜை செய்து விட்டு பின்னர் குபேரபகவானே கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களின் மூலமாக குபேர கிரிவலம் என்பது பிரபலமடைந்து வருகின்றது. கடந்த இரண்டுஆண்டுகளாக கொரோனா தொற்றால் குபேர கிரிவலம் நடைபெறாத நிலையில், நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 7வது லிங்கமான குபேர லிங்க திருக்கோவில் திறக்கப்பட்டு குபேர லிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குபேர கிரிவல தினமான நேற்று குபேரலிங்கத்தை தரிசனம் செய்ய திருவண்ணாமலை, விருதுநகர், கோவை, நாமக்கல், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மிகபக்தர்கள் குவியத் தொடங்கியதுடன் குபேர லிங்கத்தை காண நீண்ட வரிசையில் காத்திருந்து வணங்கி 14 கிமீட்டர் தொலைவுள்ள குபேர கிரிவலத்தை மேற்கொண்டனர்.

செல்வத்திற்கு அதிபதியான குபேரபெருமானே நேரடியாக வந்து தங்கி அண்ணாமலையாரை வணங்கி கிரிவலம் நேரங்களில், நாமும் கிரிவலம் வந்தால் தங்களது செல்வம் கொழித்து, கடன் சுமைகள் தீரும் என்ற நோக்கில் இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் குபேர லிங்கத்தை வணங்கி அங்கிருந்து கிரிவலத்தை தொடங்கி அண்ணாமலையாரையும் வழிபட்டு 14 கிமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து மீண்டும் குபேர லிங்கத்தை அடைந்து கிரிவலத்தை நிறைவு செய்து வழிபட்டனர். கிரிவலம் மேற்கொண்டால் நமக்கு அண்ணாமலையாரின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைப்பதுடன், சகல செல்வங்களும் கிடைக்கும் என தகவல்கள் சமூக தலங்களில் வைரலாக பரவியதால் ஆன்மிக பக்தர்கள் ஏராளமானவர்கள் குபேர கிரிவல தினமான நேற்று குபேரனை வழிபட்டு குபேர கிரிவலத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News