குமரி : காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து.
குமரி அருகே காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திவிட்டு, தப்பிய நபரை போலீசார் தேடுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெபின் (26) . வெளிநாட்டில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் தக்கலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெபின் இந்த பெண்ணிடம் தனது காதலை ஏற்க வற்புறுத்தி தகராறு செய்ததாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது சமீபத்தில் ஊருக்கு வந்த ஜெபின் மீண்டும் அந்தப் பெண்ணை சந்தித்து பேச முடிவு செய்தார். நேற்று அந்த இளம் பெண் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நாகர்கோவிலில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தார். தக்கலை பஸ் நிலையத்தில் அவர் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஜெபின் வழிமறித்து, தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்ட உடன் ஜெபின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயமடைந்த பெண் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய ஓடியவரை தேடி வருகின்றனர்.