குமரி : 5ம் நாளாக மழை, கடல் சீற்றம்; வெறிச்சோடிய கடற்கரை
கன்னியாகுமரியில் தொடர்ந்து 5ம் நாளாக மழை, கடல் சீற்றம் காணப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
தென்கிழக்கு வங்க கடலில் நேற்று காலை புயல்சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிதீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நேற்று காலை முதல் கன மழை பெய்தது. கன்னியாகுமரியில் பகல் நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் கடற்கரையில் இருந்த ஒரு சில சுற்றுலாப்பயணிகளும் கடற்கரை பகுதியை விட்டு வெளியேறினா்.
மேலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன, சுமாா் 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழும்பியது. முட்டம், ராஜாக்கமங்கலம்துறை, குளச்சல், தேங்காய்ப்பட்டினம், சொத்தவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடற்கரைக்கு வரவில்லை. குமரி மாவட்டத்தில் இன்றும் ( 23-ம் தேதி) 5-ம் நாளாக கன மழையுடன், கடல் கொந்தளிப்பும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய உதயம் சரியாக தெரியாத காரணத்தால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.