உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 14. 94 லட்சம் பறிமுதல்
அவிநாசியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் வைத்திருந்தவரிடம், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பகுதியில் மோகனா தலைமையிலான பறக்கும் படையினர் அவிநாசி திருப்பூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் இருந்து அவிநாசியில் இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த பறக்கும் படை அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருந்ததை தொடர்ந்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.