வரத்து குறைவால் கேரட் விலை கிடு கிடு உயர்வு
சேலத்தில் கேரட் வரத்து குறைவால் விலை அதிகரித்து கிலோ ரூ.85 வரை விற்பனையானது.
தமிழகத்தில் ஊட்டியில் தான் அதிகளவில் கேரட் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த பிப்ரவரி வரை கேரட் வரத்து சீராக இருந்தது. தற்போது மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கேரட் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு கேரட் வரத்து சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கிலோ கேரட் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படடது. தற்போது வரத்து சரிவால் கிலோ ரூ.80 முதல் ரூ.85ஆக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி விவசாயிகள் கேரட்டை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் கேரட் வரத்து அதிகரிக்கும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.