தஞ்சையில் கடந்தாண்டு கொடிநாள் வசூல் ரூ.1. 89 கோடி ரூபாய்
தஞ்சையில் கடந்தாண்டு கொடிநாள் வசூல் ரூ.1. 89 கோடி ரூபாய் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வியாழக்கிழமை நடைப்பெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சொ.சரவணன்(ஓய்வு) வரவேற்று, முன்னாள் படைவீரர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், பயிற்சிகள் போன்ற விபரங்களை எடுத்துரைத்தார். மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 502 நபர்களுக்கு ரூ.1 கோடியே 42 லட்சத்து 938 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், இவ்விழாவில் 61 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 3 ஆயிரத்து 615 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 2022 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 55 ஆயிரத்து 184 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 113.09 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக் கொண்டதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கொடி நாள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர் எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக கண்காணிப்பாளர் ந.சுகுமாரன், முப்படை அதிகாரிகள், கொடிநாள் வசூல் செய்த மாவட்ட அலுவலர்கள், முன்னாள் படைவீரர், சார்ந்தோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.