சட்டக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு - மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்
தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்;
Update: 2023-12-08 04:37 GMT
சட்ட கல்லூரி மாணவர் சரத்குமார்
சிவகங்கை அருகே, வேளாங்குளத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சென்றுள்ளார். அவரது உறவினர்கள் முன் விரோதம் காரணமாக அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தாக்கியதில் காயமுற்ற ஐயப்பன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க அவர் தம்பி சட்டக் கல்லூரி மாணவர் சரத்குமார் இருசக்கர வாகனத்தில் சிவகங்கைக்கு வந்தார். அவரை ஒரு கும்பல் காரில் விரட்டியது. அவரிடமிருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் அவர் வல்லனி சாலையில் சென்றார். அப்போது அந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் ஐயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர் போலீசார் இதில் தொடர்புடைய வேளாங்குளத்தை சேர்ந்த வேல்ராஜ் மகன் அழகு சுந்தரம், வேலுச்சாமி மகன் தேவேந்திரன், தென்னரசு, தேவராஜ் மகன் ராஜவேல், வெற்றி வேந்தன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இதுவரை 9 பேரை கைது செய்துள்ள நிலையில் நேற்று மேலவாணியங்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கண்ணன் என்பவர் சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்