மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம்
மேட்டூர் அருகே மானத்தால் நல்லா கவுண்டன்பட்டி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் புகார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரியில் மானத்தால் நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் அதன் கால் தடம் தென்பட்டதாகவும் அப்பகுதி கிராம மக்கள் மேட்டூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் கால் தடத்தை புகைப்படம் எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இருந்தபோதிலும் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா ரோந்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாததால் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திற்கு புகார் தெரிவித்தனர்.
கிராம மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையிலான போலீசார் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து கிராம மக்களிடம் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபடவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி சிசிடிவி காட்சிகள் வெளியாவதால் கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இது போன்ற பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் மரியமுத்து தெரிவித்துள்ளார்.