கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
ஆற்காடு அருகே சமையல் மாஸ்டர் கொலை வழக்கில், இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆற்காடு அருகே சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் திருமால் (58), சமையல் மாஸ்டர். இவரது மனைவி தனலட்சுமி (55). கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி நள்ளிரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, வீட்டின் வெளியே சத்தம் கேட்டு அவர் வெளியில் எழுந்து வந்துபார்த்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள போர் பைப்பை உடைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தார். இதையடுத்து, திருமால் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தார்.
இதில், அந்த நபர் கையில் வைத்து இருந்த இரும்பு பைப் மூலமாக திருமாலின் தலையில் பலமாக தாக்கினார். இதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சீதாராமன் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (எ) பெட்ரோல் செல்வம் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இ்ந்த வழக்கு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பெட்ரோல் செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து, அவரை காவல்துறையினர் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.