மாமனாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
விசாரணைக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்;
Update: 2023-12-20 01:28 GMT
மாமனாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட மதுக்கூர் அருகேயுள்ள கருப்பூர் கிழக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் அய்யப்பன் (34). ஓட்டுநர். இவர் திருவையாறு பகுதிக்கு வேலை தொடர்பாக அடிக்கடி வந்தபோது வளப்பக்குடியைச் சேர்ந்த ஜோசப் (71) என்பவரின் மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஜோசப்புக்கும், அய்யப்பனுக்கும் 2022 ஆம் ஆண்டில் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, அய்யப்பன் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜோசப் உயிரிழந்தார். இதுகுறித்து மருவூர் காவல் நிலையத் தினர் வழக்குப் பதிந்து அய்யப்பனைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து அய்யப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.