வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுக்கு வேட்புமனுவை இன்று முதல் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர்த்து வரும் 27ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Update: 2024-03-20 01:48 GMT

ஆட்சியர் ஜெயசீலன் 

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று   துவங்க உள்ளது. வேட்புமனு படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 27.03.2024 புதன்கிழமை ஆகும். 23.03.2024 சனிக்கிழமை மற்றும் 24.03.2024 ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இயலாது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாகனங்களில் வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் மற்றும் அவருடன் கூடுதலாக நான்கு நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் காவல் துறையின் மூலம் செய்யப்பட்டுள்ளது. . பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இடைவேளை ஏதுமின்றி பெற்றுக் கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது வைப்புத் தொகையாக (Deposit) ரூ.25,000 செலுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் பாதிக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு நாளிலும் பெறப்படும் வேட்புமனுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும். மேலும் இவை வலைதளத்திலும் வெளியிடப்படும். இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட தலைவருமான ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News