ஆயுத பூஜை: மதுரையில் ரூ.1000க்கு விற்பனையாகும் மல்லி..!
ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி, மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1000க்கு விற்பனையாகிறது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில் மலர் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு சோழவந்தான், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சத்திரப்பட்டி, வலையங்குளம், சிலைமான் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பூக்கள் இங்கே விற்பனையாகும் நிலையில், மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும், தரம், மணம், தன்மை காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகை சற்றேறக்குறைய 7 டன்னுக்கும் மேலாக இங்கே விற்பனையாகிறது. மதுரை மலர்ச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்ற பூக்களின் விலையே பெரும்பாலான தென் மாவட்டங்களின் விலையாக உள்ளது. இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டும், தற்போது பூக்கள் வரத்து குறைவு காரணமாக மதுரை மல்லிகை இன்று காலையில் கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் 1000 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. பிற பூக்களைப் பொறுத்தவரை, சம்பங்கி ரூ.200, முல்லை ரூ.500, பிச்சி ரூ.600, அரளி ரூ.200, சென்டு மல்லி ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100,கோழிகொண்டை ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'மல்லிகையைப் பொறுத்தவரை பெருமளவு வரத்துக் குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்ததோடு, தற்போது ஆயுத பூஜை வருகின்ற காரணத்தால் ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்துக்குமானால் விலை குறைய வாய்ப்புண்டு' என்றார்.