வெண்ணந்தூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திட்ட முகாம் தொடக்க நிகழ்வில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 18.12.2023 அன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி வெண்ணந்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பூபதி மாரியம்மன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இன்று (21.12.2023) இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி, பூபதி மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.இராஜேஸ், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் அ.வே.சுரேந்திரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.