திருத்தளிநாதர் திருக்கோவிலில் மார்கழி பிரதோஷம்
திருப்பத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர் திருக்கோவிலில் மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத நாளை முன்னிட்டு நந்தியபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கொடிமரம் முன்பு உள்ள நந்தியம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து அருகம்புல் மற்றும் வில்வமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பின்னர் ஏழுமுக தீப ஆராதனை காண்பித்தனர். இதனையடுத்து உற்சவ தெய்வங்களை ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கோவில் உள்பிரகாரம் மூன்று முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்மன் நந்தியம்பெருமானை வழிபட்டனர்.