காமதேனு கற்பகவிருட்ச வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு கற்பக விருட்சம், காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற திருவீதியுலா காட்சியில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.
3ஆம் திருநாளான நேற்று கற்பக் விருட்சம், காமதேனு வாகனங்களில் ஶ்ரீஅபயாம்பிகை உடனாகிய ஶ்ரீமாயூரநாதர், விநாயகர் சுப்ரமணியர் சண்டீகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டு யாசாலை பூஜைகள் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. திருவாடுதுறை ஆதினத்தின் கட்டளை தம்பிரான்கள் வேலப்ப சுவாமிகள் ராமலிங்க சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.