கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் - ஆட்சியர் ஆய்வு
இராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் (NADCP - FMD) கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 5-ம் சுற்று, 10.06.2024 தொடங்கி, 21 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடை இனங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது கூறிய நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா, மாவட்டத்தில் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசிப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் 21 நாள்களுக்கு நடைபெற்று வருகின்றன. வருகின்ற 2030-ம் ஆண்டுக்குள் கோமாரி நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், இந்த முகாம் நடத்தப்படுகிறது
. 6 மாதத்திற்கு ஒரு முறை என்ற வீதத்தில் வருடத்திற்கு 2 முறை இந்த முகாம் நடத்தப்படுகிறது. கோமாரி நோய்த் தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோயால் ஏற்படும் பால் உற்பத்தி குறைவு தடுக்கப்பட்டு, பால் உற்பத்தி அதிகரிக்கும். மாடுகள் இறப்பு தடுக்கப்படும். கன்றுகள் இறப்பை முற்றிலுமாக தடுக்க முடியும். மேலும் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடுவதால் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, 21 நாள்களில் முற்றிலுமாக தடுப்பூசி போடப்பட்டு விடும். நாள் ஒன்றுக்கு ஒரு குழுவினர் தலா 150 மாடுகளுக்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுகின்றனர்.இவற்றை கால்நடை வளர்ப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கால்நடை வளர்ப்போரின் வீடுகளுக்கு நேரில் சென்றும் கால்நடை மருத்துவர்கள் கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். இந்த முகாமில், கால்நடை பராமரிப்பு துறையின் நாமக்கல் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) Dr. E. மாரியப்பன், உதவி இயக்குநர் Dr. விஜயகுமார், முருங்கபட்டி கால்நடை மருந்தக மருத்துவர் சரவணன், கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை வளர்ப்போர் என பலரும் கலந்துகொண்டனர்.