மக்களைத் தேடி மருத்துவம் பயனாளர் விவரம் அறிவிப்பு - ஆட்சியர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5.21 லட்சம் பேர், இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 8,032 பேர் பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-23 01:10 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5,21,281   நபர்களும், இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 8,032 நபர்களும் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வுக்காக அக்கறையுடன், சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலன் காத்து வருகிறது. ஏராளமான நலத் திட்டங்களின் வரிசையில் “மக்களைத்தேடி மருத்துவம்” “இன்னுயிர் காப்போம்” போன்ற மகத்தான திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகிறார்  என்றால் அது மிகையல்ல. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம்  திட்டத்தினால் 1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 5,21,281 நபர்கள்  பயன் பெற்றுள்ளனர்.

Advertisement

இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு, அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும்  உயிர் காக்கும் உன்னதத் திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் ரூ.213.47 கோடி செலவில் 2.45 லட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 8,032 நபர்களுக்கு ரூ.6,23,04,160  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயனடைந்த பருத்திக்குடி ஊராட்சி படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்த   எஸ்.நாகையன் கூறுகையில்,  "எனக்கு ரத்த அழுத்தம் பக்கவாதம் நோய் உள்ளதால், என்னால் நடக்க முடியாது.  ஒன்றரை வருடத்துக்கு முன்னாள்  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் வீடு தேடி வந்து பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் தந்ததோடு, தேவையான உடற்பயிற்சியும் சொல்லித் தந்தனர். தற்போது  எனது உடல் நலம் நன்கு  தேறிவந்துள்ளது"    மற்றொரு பயனாளி விஜயகுமார் கூறுகையில்,  "நான் எனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, கோவிலாச்சேரி அருகே பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. என்னை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். எனது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இன்னுயிர் காப்போம் 48 மருத்துவ காப்பீட்டு முறையில் நன்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளேன். இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப் படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மிக்க நன்றி,” எனத் தெரிவித்தார் இவ்வாறு மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News