பள்ளி நேரங்களில் பஸ்சை நிறுத்துமாறு அமைச்சர் அட்வைஸ்
மேல்பேரமநல்லூரில் மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் பஸ்சை கட்டாயமாக நிறுத்த வேண்டும் என போக்குவரத்து அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
மாதத்தில் பத்து நாட்கள் பேருந்து நிறுத்தலைன்னு பள்ளிக்கு போக மாட்டேன்றாங்க என பொதுமக்கள் அமைச்சர் அன்பரசன் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வியிடம் புகார் தெரிவித்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லை என்றால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் போக்குவரத்து துறைக்கு அறிவுரை கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழக சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்து கொள்முதல் பணிகளை துவக்கினர். இந்நிகழ்வுக்காக வந்த அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் மாதத்தில் 30 நாட்களில் , எங்கள் மாணவர்கள் 10 நாட்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்படாததால் பள்ளிக்கு செல்லாமல் அவதியடைவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த நிறுத்தம் வரை வந்து செல்லும் பேருந்து சேவையை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு போன் செய்த அமைச்சர் அன்பரசன், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்த நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்க கூடாது என தெரிவித்து இதுகுறித்து போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை தவறும் பட்சத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.