திட்ட மதிப்பீடு குறித்து ஸ்பாட்டில் கமெண்ட் செய்த அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட், பள்ளி கட்டடங்கள் உள்பட, பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக அமைச்சர்கள் நேரு, பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி வந்தனர். காலை, ஓசூர் பகுதியில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து மாலை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டட பூமிபூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். அப்போது பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொள்ளாமல் எதிரில் நின்று கொண்டார்.
‘எல்லாம் நீங்களே செய்யுங்கப்பா’ என்று கூறியவர், அடுத்த நொடியே, கற்பூரம் காண்பிக்கும் தட்டை நீட்டியவரிடம், பணத்தை போட்ட கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,விடம், ‘கட்டா போடு மதி’ என்றார். பின்னர் அமைச்சர் சக்கரபாணியை பார்த்து தம்பி, 22 வகுப்பறை கட்ட, நான்கரை கோடியாம் தெரியுமா? என்றார்.
தர்மசங்கடத்துக்கு ஆளான அமைச்சர் சக்கரபாணியும் தலையை மட்டும் அப்படியா என்று தலையாட்டியவாறு நின்றார். கூட்டத்தில் இருந்த நிருபர்கள், திட்ட மதிப்பீட்டை பற்றி எதிர்கட்சிகள் தான் விமர்சனம் செய்வர். ஆனால் ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர், ஸ்பாட்டிலேயே கமென்ட் அடிக்கிறார். ஆனாலும் இவருக்கு குசும்பு அதிகம்பா என கூறியவுடன் அருகிலிருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தவாறு நகர்ந்தனர்.