அ.தி.மு.க., போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு கண்ட அமைச்சர் நேரு
திருச்சி அருகே அதிமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்திற்கு அமைச்சர் நேரு உடனடியாக தீர்வு கண்டார்.
அதிமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர்களான முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஆதனூர் செல்வராஜ் ஆகிய இருவரும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகை வராத காரணத்தினால் இன்று மதியம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வாசல் முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தனர். இதையடுத்து இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அறிந்த துறையூர் அதிமுகவினர் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் துறையூர் பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் தாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி திரும்பி கொண்டிருந்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பாலக்கரையை கடந்த்போது அவரது காரை அதிமுகவினர் வழிமறித்தனர். அதிமுகவினர் அமைச்சர் நேருவிடம் நடந்ததை கூறினர். அமைச்சர் நேரு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த பணிகளுக்கான தொகையை உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி தர சொல்கிறேன் என்று கூறினார்.
அமைச்சர் கூறிய பதிலால் சமாதானம் அடைந்த அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.