சீமானுக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் காட்டமான கேள்வி

நாம் தமிழர் சீமானுக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2024-03-09 14:55 GMT

ஈஸ்வரன் எம்எல்ஏ 

 நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்கள் சக்தி மசாலாவினுடைய விளம்பரத்தை செய்தியாளர்கள் மத்தியில் காட்டி மற்ற மொழிகளில் விளம்பரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தார். சக்தி மசாலா இந்தியாவினுடைய மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து குடும்பங்களும் பயன்படுத்துகிறார்கள்.

வியாபார ரீதியாக அந்த மாநிலங்களில் வாழ்கின்ற மக்கள் மசாலா பொருட்களுடைய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு புரிகின்ற மொழியில் விளம்பரம் செய்யப்படுகிறது. தொழிலிலும், வியாபாரத்திலும் இருப்பவர்கள் இதைப்போல பின்பற்றுவது தவிர்க்க முடியாதது, தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் அந்த மாநில மொழிகளை கற்றுக் கொள்ளலாம், பேசலாம் அது இயல்பானவை.

எக்காரணத்தை கொண்டும் அவர்கள் எல்லாம் தாய்மொழி தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசியலுக்காக மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சகோதரர் சீமான் அவர்கள் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கொடுக்கின்ற நிறுவனமாக ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் மக்களிடத்தில் சேவையாற்றி வருகிறது.

தொழில் செய்து வருகின்ற லாபத்தில் ஒரு பகுதியை பல்வேறு சேவைகளுக்காக அன்பளிப்பாக கொடுக்கின்றார்கள். தமிழகத்தில் எந்த பேரிடர் வந்தாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்றுவதற்காக அதிக படியான நிதியை நன்கொடையாக வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெளி உலகத்திற்கு தெரிவிக்காமலேயே கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு கட்டமைப்புகளுக்கு கோடிக்கணக்கான நிதி வழங்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட இரக்க குணம் வாய்ந்த சக்தி மசாலா நிறுவனத்தை கொச்சைப்படுத்தி பேசினால் தமிழக மக்களே எதிர்ப்பார்கள். சக்தி மசாலா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தாமாக முன்வந்து மக்கள் சேவையாற்றுகின்றார்கள்.

இப்படிப்பட்ட நிறுவனங்களுடைய வியாபார யுக்திகளை தன் சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்தினால் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற நல்லவர்களும் ஒதுங்கி கொள்வார்கள். இதைப் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். தமிழ் சினிமாவினுடைய முன்னணி நடிகர்கள் வேறு மொழிகளிலே நடிக்கிறார்கள். தமிழ் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெவ்வேறு மாநிலங்களில் வெளியிடுகிறார்கள். பல தமிழ் பட இயக்குனர்கள் இந்தி மொழியிலேயே படத்தை இயக்குகிறார்கள். பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்க வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

தங்கள் வியாபாரத்திற்காக வெவ்வேறு மொழிகளை அதிகமாக பயன்படுத்துவது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தான். திரைத்துறை சார்ந்த வெவ்வேறு மொழி வியாபார யுக்திகளை சகோதரர் சீமான் தடுக்க முன் வருவாரா? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்எல்ஏவும் ஆன ஈஸ்வரன் அறிக்கை விடுத்துள்ளார்

Tags:    

Similar News