3 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டித்தர அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் மேலும் 3 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பெ.சு.தி. சரவணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
கலசபாக்கம் தொகுதியில் செய்யாற்றின் கரையோரம் பெரும்பான்மையான கிராமங்கள் உள்ளன. செய்யாற்றில் வெள்ளம் ஏற்படும்போது அவ்வழியாக செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதேபோல், மழைக் காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, செய்யாற்றின் கரையோர கிராமங்களில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண் டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் தொகுதி மக்கள் சார்பில் சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆகியார் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன்பேரில், 3 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.55.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்துள்ளார்.
இதேபோல், இத்தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் தரைப்பாலங்களுக்கு மாற்றாக உயர்மட்ட பாலங்கள் கட்ட ரூ.20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. காலூர் ஊராட்சியில் 10.45 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அல்லியந்தல் மற்றும் ஜப்தி காரியந்தல் கிராமங்களை இணைக்கும் வகையிலும், அரிதாரிமங்கலம் மற்றும் கடலாடி கிராமங்களை இணைக்கும் வகையிலும்,மட்டவெட்டு மற்றும் காரப்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையிலும் 3 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டித்தர வேண்டும் என தொகுதி மக்கள் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவி டம் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர். குறிப்பாக விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி என்ப தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல், மழைக் காலங்களில் செய்யாற்றை கடந்து செல்ல பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு சென்று மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் 3 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள்.என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.