கொலை வழக்கில் மகன்கள் கைது : தாய் தற்கொலை முயற்சி
தூத்துக்குடியில் கொலை வழக்கில் மகன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன்கள் சுதாகர், சதீஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக முனியசாமியை அண்ணன் தம்பி இருவரும் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்த நிலையில் அந்த 2 பேரும் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அவர்களது தாயார் நிர்மலா (45), நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூரத்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.