சேவூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
சேவூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து போத்தம்பாளையத்தில் சென்னியப்பன் காட்டுப் பாறை என்ற இடத்தில் இரு சிறுத்தைகளை அப்பகுதி வழியாக மொபட்டில் சென்ற அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் பார்த்ததாகவும், நாயை துரத்தி வந்த சிறுத்தைகள் இரண்டும் வண்டியை பார்த்ததும் சோளக் காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும், பயத்தில் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு ஓடி ஊருக்குள் தகவல் கூறியுள்ளார்.
இதையடுத்து திருப்பூர் வனச்சரக வனவர் முருகானந்தம் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் இருந்த பல்வேறு விலங்கு கால் தடங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வருவாய்த் துறையினர் மற்றும் சேயூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு காலடித்தடங்கள் சிறுத்தையினுடயது என்று உறுதிப்படுத்த முடியாத வகையில் இருப்பதாகவும், எனவே, பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 -ம் ஆண்டு இதே பகுதி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.