அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் புலிகளின் நடமாட்டம்
வால்பாறை அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி..ஜூன்..06 பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அருகே தமிழக - கேரளா எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இந்த தமிழக கேரள எல்லைப் பகுதியில் வால்பாறைக்கு அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறையை சுற்றி பார்த்துவிட்டு வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லுவது வழக்கம்.
இந்தப் பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.. இந்நிலையில் தற்போது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள வாழச்சால் பகுதியில் இரண்டு புலிகள் கம்பீரமாக நடந்து வந்துள்ளது.. அப்போது அப்பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் இரண்டு புலிகள் நடந்து வருவதை கண்டு அவரது செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது புலிகளின் நடமாட்டம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை கண்ட வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் எனவும் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி வரும் வரை வனப்பகுதி சாலை என்பதால் யானை,கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைகளை கடந்து செல்வது வழக்கம் இதனால் வனவிலங்குகளைக் கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கவோ அதை துன்புறுத்துவோ கூடாது என வன சோதனை சாவடியிலேயே அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் தற்போது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ கூடாது என கேரள மாநில வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எச்சரிக்கையை மீறி வனப்பகுதி சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கினால் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..