கோவையில் பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த மாநகர காவல் ஆணையாளர்
கோவையில் பெண் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் விடுமுறை அறிவித்தார்.
கோவை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் "மகளிர் தின திருவிழா" என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் தலைமையக துணை ஆணையர் சுகாசினி துணை ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பெண் போலீசார் கலந்து கொண்டனர். இதில் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் பெண் காவலர்கள் அனைவரும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர். இவ்விழாவில் சிறப்புரையாற்றிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மகளிர் தினம் என்பது தற்போது மகளிர் வாரம் என ஆகிவிட்டது என தெரிவித்தார். பெண் காவலர்கள் அனைவரும் வருடம் முழுவதும் கடின உழைப்பை தருகிறீர்கள் என தெரிவித்த அவர் வருடத்தில் என்றைக்காவது ஒரு நாள் மகிழ்ச்சியாகவும் மனம்விட்டு சிரிக்கவும் ஒரு வாய்ப்பு தேவை அதனை மகளிர் தினம் என்ற பெயரில் நாம் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கோவை மாநகர காவல் துறையை பொருத்தவரை மகளிர் தினம் என்று ஒரு நாள் மட்டும் நாம் கொண்டாடினாலும் வருடம் முழுவதும் ஏதேனும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால் முதலில் மனம் சந்தோசமாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர் மனம் சந்தோசமாக இருந்தால் வேலை தானாக நடக்கும் எனத் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதத்தில் தேர்தல் பணிகள் இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இது போன்று எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள முடியாது என தெரிவித்த அவர் தற்பொழுது உள்ள எனர்ஜிகளை எல்லாம் அடுத்து இரண்டு மாத பணிகளில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும் இன்றைய மகளிர் தின விழா முடிந்ததை தொடர்ந்து நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்க கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வரின் ஆணையின்படி காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் நாளை ஒருநாள் ஓய்வு எடுத்துவிட்டு அதற்கு அடுத்த நாளிலிருந்து தேர்தல் பணிகளில் புத்துணர்ச்சியுடன் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.மகளிர் தின விழா நிகழ்ச்சிகளை ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
காவல் ஆணையாளர் நாளை பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்று கூறியவுடன் அங்கு இருந்த அனைத்து பெண் காவலர்களும் ஆர்ப்பரித்தனர்.