வெற்றியை நோக்கி கடினமாக உழைக்க வேண்டும் - ஆட்சித்தலைவர் ச.உமா

Update: 2024-05-29 08:30 GMT

அறிமுக விழா

நாமக்கல் வட்டம், கீரம்பூர் அரசு மாதிரி பள்ளியில் (கொங்கு பள்ளி) இன்று (29.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ”கலங்கரை” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் 10,11-ஆம் வகுப்பு சேர்க்கை அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மாதிரிப்பள்ளி கடந்த ஆண்டு ஜூன் 2023-ல் தொடங்கி வைக்கப்பட்டு, கீரம்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நிதி உதவி வழங்கிய கொங்கு பள்ளி தாளாளர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வளையப்பட்டி பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் மாதிரி பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொண்ட பிறகு அரசின் உரிய அனுமதி மற்றும் நிதி பெற்று விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ஓராண்டிற்குள் பள்ளி கட்டடங்கள், ஆய்வகங்கள், விடுதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியை தேர்வு செய்து படித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ, மாணவியர்களை 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் வகையில் முழு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய நவீன உலகம் பறந்து விரிந்தது. பல்வேறு வாய்ப்புகள் நிறைந்துள்ளன. நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகளில் உள்ள படிப்பு சார்ந்த நல்லதை மட்டும் நாம் எடுத்துகொண்டு நம் வாழ்க்கை பாதையை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளியில் பயின்றவர்கள் கூட கல்லூரி தேர்வு செய்யும் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகளை தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவிற்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. போட்டி நிறைந்த உலகில் மாணவ செல்வங்கள் எவ்வித கவன சிதறலும் இன்றி, தங்களது கவனத்தையும், கருத்தையும் ஒருமித்து செலுத்தினால் மட்டுமே உயர்நிலையை அடைய இயலும். அரசு கல்லூரிகளில் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியாக ராஜீவ் காந்தி சென்னை அரசு மருத்துவ கல்லூரி விளங்குகிறது. இதேபோன்று பள்ளிகளிலும் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கும் வகையில் முதல் மூன்று நிலையில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து நல்ல காற்றோட்டத்துடன் கூடிய உட்கட்டமைப்பு உடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு சிறந்த ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

நாமக்கல் அரசு மாதிரி பள்ளியில் தற்போது 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 40 குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்களும், 20 மாணவியர்களும் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மாற்றுத்திறன் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு மாதிரி பள்ளிகளில் நம்பி சேர்க்கலாம். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் வழிகாட்டுதல்களை நல்ல முறையில் எடுத்து கொண்டு தாங்கள் தேர்வு செய்த துறையில் வெற்றியை நோக்கி கடினமாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் நம் மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்து விளங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து, 10 -வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற 36அரசுப்பள்ளிகள் மற்றும் 11 –ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற ௬ அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும், நாமக்கல் அரசு மாதிரி பள்ளியில் 10 –ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசாக புத்தகங்களையும் வழங்கினார். 10-ஆம் வகுப்பு மாணவன் செல்வன் சி.கோகுல் பிரசாத் அவர்கள் தான் வரைந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஓவியத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்களுக்கு பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மு.கபீர், மாவட்டக் கல்வி அலுவலர் க.விஜயன், தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் (சேலம் மண்டலம்) வே.இராஜேந்திரன், வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) இராஜேஷ், கீரம்பூர் அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் ச.மாரியப்பப்பிள்ளை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News