நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை சாலை விபத்துகளில் காயம்பட்ட 6,568 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-05-13 15:48 GMT
நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி மதிப்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது.... தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணம் எதுவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் பெறாது. இதற்கான செலவை அரசே ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் முழுவதும் 2.45 லட்சம் பேருக்கு ரூ.213.47 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சாலை விபத்துகளில் காயம்பட்ட 6,568 பேருக்கு ரூ.4 கோடியே 73 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.