நவ 9ல் லாரிகள் ஓடாது : லாரி உரிமையாளர்கள் கொடுத்த ஷாக் நியூஸ்
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை திரும்ப பெறக்கோரி நவம்பர் 9ஆம் தேதி லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-19 10:23 GMT
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்தும் திரும்பப்பெற வலியுறுத்தி நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடபட உள்ளதாகவும், அன்றைய தினம் மிழ்நாடு முழுவதும் உள்ள 6.50 லட்சம் லாரிகள் இயங்காது எனவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நாமக்கல்லில் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக் குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் உள்ளன. சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை, மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் விலை உயர்வால் நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500 ல் இருந்து ரூ.750 ஆகவும் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596 ல் இருந்து ரூ.904 உயர்த்தி ரூ.4,550 ஆகவும் 10 சக்கர லாரிகளுக்கு ரூ.4,959 ல் இருந்து ரூ.2,041 உயர்த்தி ரூ.7,059 ஆகவும் 12 சக்கர லாரிகளுக்கு ரூ.6,373 ல் இருந்து ரூ.3,327 உயர்த்தி ரூ9,170 ஆகவும் 14 சக்கர லாரிகளுக்கு ரூ.7,787 ல் இருந்து ரூ.3,413 உயர்த்தி ரூ.11,290 ஆகவும் 16 சக்கர லாரிகளுக்கு ரூ.4,200 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது எனவும் இந்த வேலைநிறுத்தத்தில் 6.50 லட்சம் லாரிகள் அன்று ஒருநாள் இயங்காது எனவும் தெரிவித்தார்.