புதுப்பொலிவு பெறும் நாமக்கல் ரயில் நிலையம்!
நாமக்கல் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, பயணிகள் டிக்கெட் வழங்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஓய்வறைகள் போன்ற வசதிகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்துப்பட்டுள்ளது.
Update: 2024-02-25 15:40 GMT
நாமக்கல்லில் மேம்படுத்துப்பட்ட ரயில் நிலையத்தை பிப்ரவரி 26ம் தேதி (திங்கட்கிழமை )பாரத பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களை மத்திய அரசு 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது, காத்திருப்பு அறை, இலவச வைஃபை வசதி, மின்தூக்கி படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளைக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 2-ம் கட்டமாக 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கான பணிகளை நாளை திங்கட்கிழமை பிப்ரவரி 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதில் சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் நகரில், சேந்தமங்கலம் ரோட்டில், நாமக்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை என்ற கோரிக்கையின் அடிப்படையில், இந்திய ரயில்வே துறை தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து, நாமக்கல் ரயில் நிலையத்தை புதுப்பித்துள்ளது. நாமக்கல் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, பயணிகள் டிக்கெட் வழங்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஓய்வறைகள் போன்ற வசதிகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்துப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட நாமக்கல் ரயில்நிலையம் நாளை (பிப்ரவரி 26) காலை 10.45 மணியளவில் பாரத பிரதமர் மோடி இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுப்பிக்கபட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ரயில்வேதுறை உயர் அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, நாமக்கல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக சேவை சங்கத்தினர், ரயில் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.