நாமக்கல் ஸ்ரீ பட்டாபிராமர் கோயிலில் உழவாரப்பணி
நாமக்கல் அருகே மேட்டுப்பட்டி, ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் திரளான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு உழவாரப்பணியை செய்தனர்.
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஏ.மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் (ஏவிஏஏ) உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உழவாரப்பணி துவக்க விழாவிற்கு, பஸ் அதிபர் தயாளன் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார்.
முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ. உதயகுமார், எம்.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, விழாவினை துவக்கி வைத்தனர். இன்ஜினியர் மாணிக்கம், காசி விநாயகர் கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, கோயில் அர்ச்சகர் பிச்சுமணி அய்யர், கோயில் அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உழவாரப்பணியை துவக்கி வைத்தனர். முன்னதாக உழவாரப்பணி செய்யும் போது அங்கு வானத்தில் கருடன் வட்டமிட்டு வந்ததை கண்டு அங்கு இருந்தவர்கள் மெய் சிலிர்த்தனர்.
ஊர் பொதுமக்கள் சார்பாக உழவாரப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பானகம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. நாமக்கல் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன் ஸ்ரீ பட்டாபிராமர் கோயில் தல வரலாறு குறித்துப் பேசினார். பழனிசாமி, கண்ணன், சந்திரசேகரன், தமிழன் பிரஸ் செல்வகுமார், ராசிபுரம் பூபதி, மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கோயிலை சுற்றிலும் சுத்தம் செய்து உழவாரப் பணியில் ஈடுபட்டனர். உழவாரப்பணி முடிந்தவுடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் அருணாசலம் நன்றி கூறினார்.