மேட்டூரில் பேருந்து மீது வேப்பமரம் சாய்ந்து விபத்து.
மேட்டூரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது வேப்பமரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பேருந்துக்குள் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சேலம் பேருந்து நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்து ஒன்று 17 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் பெரியசாமி இயக்கி வந்தார். பேருந்து மேட்டூர் ஆர் .எஸ், பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த 50 ஆண்டுகால பழமையான ராட்சத வேப்பமரம் பேருந்து மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் மின் கம்பி மீதும் மரம் சாய்ந்ததால் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பேருந்து மீது விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக மேட்டூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கருமலை கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.