போராடும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வன்மையாக கண்டனம் தெரிவிப்பு.
இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் அ.செயக்குமார், மாவட்ட செயலாளர் மெ.சங்கர், மாவட்ட பொருளாளர் சு.பிரபு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நெடுநாளைய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத மெத்தனப்போக்கினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வன்மையாக கண்டனம் செய்கிறது. தேர்தல் அறிக்கை உறுதிமொழிகள், தேர்தல் பரப்புரைக் கால வாக்குறுதிகள், போராட்டக்கால ஆதரவு நம்பிக்கை மொழிகள், பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டவைகள் போன்ற எவற்றையும் நிறைவேற்றாத அலட்சியப்போக்கும், கருத்தொற்றுமை மற்றும் கலந்தாய்வு ஏதுமின்றி ஆட்சியாளர்களின் பெருவிருப்பத்தில் திணிக்கப்பட்ட மாநில பணிமூப்பு அரசாணைஎண்;243/நாள்:21.12.2023 போன்றவைகளும் தான் தொடக்கக்கல்வி ஆசிரியர்களை முற்றுகைப்போராட்டம் உள்ளிட்ட தீவிரமான போராட்டங்களுக்கு கடந்த 3 நாள்களாக தள்ளி உள்ளது.இத்தகுப் போரட்டங்களுக்கும்- இதன் மிக மோசமான விளைவுகளுக்கும் தமிழ்நாடுஅரசுதான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது-பாழ்ப்பட்டு உள்ளது என்று பரவலாக, அதேநேரத்தில் மிகவலுவாக பொதுமக்களால் பேசப்பட்டு வரும் நிலையில், காவல்துறை கொடூரமான குற்றவாளிகளை வேட்டையாடுவது போன்று கல்விக்கற்றுக் கொடுக்கும் ஆசிரியப் பெருமக்களை வேட்டையாடுதல் செய்து இருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. கடந்த சிலநாள்களுக்கு முன் மத்திய இரயில்நிலையம் -பொது மருத்துவமனை போன்றவை அமைந்துள்ள சென்னையின் முதன்மைச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றப்பொழுது -போராடுபவர்களின்மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதித்து அமைதி காத்துள்ள சென்னை பெருமாநகர் காவல்துறைஎளிய -அப்பாவி ஆசிரியர்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு கூட அனுமதிக்காமல் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது ஜனநாயக விரோதப்போக்காகும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 3 நாள்களாக போராடும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும்- பார்வைக்கும் சென்று விடாத வகையில் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு காவல்துறை செய்துவரும் அராசகமான செயல்பாடுகள் போராட்டங்களை நசுக்குவதாகும்; ஒடுக்குவதாகும். இத்தகு ஒடுக்குமுறைகள் மிகமோசமான -பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை அரசுக்குத் தேடித் தருவதாகிவிடும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கைச் செய்கிறது. நாமக்கல் மாவட்டம் சார்ந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் அவர்களை 30.07.2024 அன்று மிக மோசமான முறையில், ஒரு சமூகவிரோதியைக் கைது செய்வதுப்போன்று பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்துக்கொண்டு முருகசெல்வராசனை அமுக்கிப்பிடித்துக் கொண்டே தார் சாலையில் தரதரவென்று இழுத்துவந்து குண்டுக்கட்டாய் தூக்கி வந்து கைது செய்து அடைத்துள்ள காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான -மிருகத்தனமான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வனமையாக கண்டனம் செய்கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் நாளேடு மற்றும் ஊடகச் செய்தியாளர்களைக்கூட சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தி காவல்துறை வாகனத்தில் அடைக்கச்செய்து, போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை சொல்ல விடாமல்-பேச விடாமல் காவல்துறை தடுத்து இருப்பது அரசியல் சாசன உரிமைகளை மறுக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளாகும். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின 31 அம்சக் கோரிக்கைகளில் நேரடித்தலையீடு செய்து டிட்டோஜாக் கூட்டுநடவடிக்கைக் குழுவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்து கல்விக்களத்தின் பொது அமைதியை பேணிப்பாதுகாக்குமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.