ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா பள்ளியில் தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிக்கு தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடந்தது. பள்ளியில் தேசிய அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மல்லர் கம்பம் போட்டிக்கு தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்டோருக்கு தனி தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 4 பேர் வீதம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் நிரஞ்சனி சங்கர், போட்டி மேற்பார்வையாளர் ஹரிகரன், தலைமை நடுவர்களான ராமச்சந்திரன், ஜனார்த்தனன், சங்கீதாராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சாமிதுரை, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை தேர்வு செய்தனர். இதில் தேர்வான வீரர்கள் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற உள்ள போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.